இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டுவென்டி 20 உலக கோப்பை தொடரில் புற்றுநோயில் இருந்து குணமடைந்த ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், பார்மின்றி தவித்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இளம்வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அப்போது இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 2 டுவென்டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் இலங்கையில் டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது.
மேற்கண்ட இரு கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியின் தேர்வு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு காலை 11.30 மணிக்கு கூடி வீரர்களை தேர்வு செய்தது. மாலை 3 மணி வரை தொடர்ந்த கூட்டத்தில், இந்திய அணியின் கேப்டன் டோணி கலந்து கொள்ளவில்லை.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிடின் இடத்தை நிரப்பும் வீரர் யார் என்ற கேள்வி நீடித்தது. மேலும்
புற்றுநோயில் இருந்து குணமாகி பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், டுவென்டி20 உலக கோப்பையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாரா என்ற சந்தேகம் நீடித்தது.
புற்றுநோயில் இருந்து குணமாகி பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், டுவென்டி20 உலக கோப்பையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவாரா என்ற சந்தேகம் நீடித்தது.
டெஸ்ட் தொடர்:
இந்த நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி முதலில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் மூத்த டெஸ்ட் வீரர் லக்ஷ்மணுக்கு மீண்டும் அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தில் ஓய்வெடுத்துக் கொண்ட மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
கேப்டனாக டோணி தனது பணியைத் தொடருவார். மேலும் ஷேவாக், கம்பிர், விராத் கோஹ்லி, ஜாகிர்கான் ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். இளம் வீரர்களான பியூஸ் சாவ்லா, அஸ்வின், ஓஜா, புஜாரா, ரஹானே, சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டுவென்டி20 உலக கோப்பை:
இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக டோணியும், துணை கேப்டனாக விராத் கோஹ்லியும் பணியை தொடர உள்ளனர். ஷேவாக், கம்பிர், ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். இளம் வீரர்களான மனோஜ் திவாரி, அசோக் டின்டா, அஸ்வின், உமேஷ் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வேகப்பந்துவீச்சாளர் பாலாஜி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

